|
பக்கம் 1 |
|
|
|
|
பக்கம் 2 |
|
|
|
|
பக்கம் 3 |
|
|
|
|
அதிபர் அறிக்கை - 2008 |
|
|
எமது கல்லூரியின் வளாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கிருபாகர சிவசுப்பிரமணிய பெருமானை நெஞ்சிலிருத்தி |
|
இன்றைய பரிசளிப்பு விழாவின் பிரதம விருந்தினர் அவர்களே!, சிறப்பு விருந்தினர் அவர்களே! , வணக்கத்திற்குரிய சிவஸ்ரீ சிவதாசக் குருக்கள் அவர்களே! , நல்லூர்க் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களே!, கல்விசார் உத்தியோகத்தர்களே!, சகோதரப் பாடசாலைகளின் அதிபர்களே!, எமது கல்லூரியின் இளைப்பாறிய அதிபர்களே! பிரதி அதிபர்களே! ஆசிரியர்களே!, எமது கல்லூரியின் ஆசிரியர்களே!, கல்விசாரா உத்தியோகத்தர்களே! , அன்பார்ந்த மாணவச் செல்வங்களே! , பெற்றோர்களே! நலன் விரும்பிகளே! உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கத்தை முதற்கண் தெரிவித்து மகிழ்வடைகின்றேன். |
|
|
|
இன்றைய பரிசளிப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து எம்மை சிறப்பித்துக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணக்கல்வி வலயத்தின் பணிப்பாளர் மதிப்பிற்குரிய திருமதி.அருலேஸ்வரி வேதநாயகம் அம்மையார் அவர்களே, |
|
தாங்கள் எமது கல்லூரியின்; பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிப்பதையிட்டு நாம் மட்டற்ற மகிழ்வடைகின்றோம். |
|
ஆசிரியப் பணியிலும், கல்வி நிர்வாகப் பணியிலும் நீண்டகால அனுபவத்திரட்சி மிக்க தாங்கள் யாழ்ப்பாண வலயத்தின் கல்விப்பணிப்பாளராகப் பதவியேற்று எமது கல்லூரிக்கு முதற் தடவையாக பரிசளிப்பு விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருப்பது எமது கல்லூரிக்குத் தாங்கள் வழங்கிய கௌரவமாகக் கருதுகின்றோம். ஆசிரிய சேவையில் இணைந்து கொண்ட தாங்கள் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் பாடசாலை, ஹற்றன் சென்; ஜேம்ஸ் வித்தியாலயம், |
|
ஆவரங்கால் நடராஜா இராமலிங்கம், ஆவரங்கால் மகாஜனா ஆகிய பாடசாலைகளில் சேவையாற்றியிருந்தீர்கள். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கணித பாடத்தில் விசேட பயிற்சியைப் பெற்றுக்கொண்ட தாங்கள் தேசிய கணித டிப்ளோமாவையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் நிறைவுசெய்துள்ளீர்கள். கல்விச்சேவையில் பல்துறைகளில் பரிணமித்த தாங்கள் கோப்பாய் கோட்டத்தின் கணித ஆசிரிய ஆலோசகராகவும், யாழ் மாவட்டத்திற்கான விஞ்ஞான, கணித உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இருந்து ஆற்றிய பணிகள் இன்றும் நினைவுபடுத்தக்கூடியவை. யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கணித மூலவள நிலையத்தை ஆரம்பித்து அதன் முக்கியத்துவத்தை கல்விப் புலத்தில் அறிமுகப்படுத்திய பெருமை தங்களையே சாரும். கணிதபாடக் கற்பித்தல் நுட்ப முறைகளில் தாங்கள் படைத்த சாதனைக்காக பொதுநலவாய அமைப்பினால் 1994 - 1995 ஆண்டிற்கான இலண்டன் கணித விஞ்ஞான தொழில் நுட்பவியலாளர் விருது வழங்கப்பட்டமை யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்திற்குத் தங்களால் கிடைத்த வெகுமதியாகும். |
|
தங்களின் நீண்டகால கல்விப் பணியில் துணுக்காய் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி 1.10.1998 இல் இருந்து துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராகப் பதவியேற்ற தாங்கள் தொடர்ந்து வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் ஆரம்பக் கல்விக்கும், முன்பள்ளி அபிவிருத்திக்கும் பொறுப்பாக இருந்ததுடன் மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருந்து பெரும் பணியாற்றியிருந்தீர்கள். தொடர்ந்து தென்மராட்சிக் கல்வி வலயத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய தாங்கள் தற்போது யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் பணிப்பாளராகப் பொறுப்பேற்றிருப்பது ஆரோக்கியமான கல்விச் சமூகத்திற்கும், கல்வி முகாமைத்துவத்திற்கும் பெருந்துணையாக அமையும் என்ற நம்பிக்கையோடு தங்களை வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றோம். |
|
|
|
இன்றைய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்திருக்கும் செல்வி.ஞானலோஜினி சிவஞானம் அவர்களே! |
|
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று சட்டத்துறைக்குத் தெரிவான தாங்கள் பிரபல சட்டத்தரணியாக விளங்குவது எமது கல்லூரிக்கு பெருமை தருவதாகும். தாங்கள் கற்ற கல்லூரி மீது கொண்டுள்ள பற்றுறுதியை தங்களால் கல்லூரிக்கு வழங்கப்படும் உதவிகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கல்லூரியின் முகப்பு வாயிலை தங்களின் தந்தையார் அமரர் டாக்டர் சிவஞானம் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைத்துக்கொடுத்ததன் மூலம் கல்லூரியின் முகப்புத் தோற்றத்தை அழகுபடுத்தி உள்ளீர்கள். இவ்விழாவில் தாங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருப்பதன் மூலம் தங்களின் உயர் நிலையை மாணவச் செல்வங்கள் அறியவும் எதிர்காலத்தில் நாமும் இதுபோன்ற பணிகளை எமது கல்லூரிக்குச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை அவர்கள் தம்முள் வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது. அவ்வகையில் உங்களின் வருகையால் நாம் மனநிறைவடைகின்றோம். |
|
|
|
அன்பார்ந்த பெற்றோர்களே! |
|
இன்றைய பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பேருவகை அடைகின்றேன். உங்கள் பிள்ளைகள் பரிசு பெறுவதைக்கண்டு களிப்புறும் அதே நேரம் உங்கள் பிள்ளைகளின் கல்வி நலன்களில் நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது சாலப் பொருத்துடையதாகும். அவ்வகையில் இன்றைய நவீன தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதையில் எமது மாணவர்கள்களை அழைத்துச் செல்லும் பொருட்டு கணினி வசதிகள் அடங்கிய படிப்பகத்தினை ஆரம்பித்துள்ளோம். இதற்காக பழைய மாணவர் சங்கம் இலண்டன் கிளை 5.3 மில்லியன் ரூபாவை தந்துதவியுள்ளது இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் கணினி அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வசதிகள் முழுமையானவையல்ல. சுமார் 1800 மாணவர்கள் கல்வி கற்கும் எமது கல்லூரியில் 100 கணினிகளாவது தேவை. இவற்றை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் நாம் மேற்கொண்டு வருகின்றோம். இதற்கு மேலாக மாணவர்களுக்கான ஆங்கிலக் கல்வியும் ஏனைய பாடங்களில் மேலதிக வகுப்புக்களையும் நடாத்துவதுடன் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் பங்கு பற்றி தமது திறனை - ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக் கொடுத்துள்ளோம். |
|
இத்தகைய வசதிகளை நாம் செய்துகொடுக்கும் அதே வேளை உங்கள் பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளிலும் அவர்களின் ஒழுக்கவியலிலும்; நீங்கள் அதீத அக்கறை கொண்டு எமது கல்லூரியின் புகழையும் பெருமையையும் காப்பாற்றுவதுடன் ஒழுக்கமும்இ பண்பாட்டு விழுமியமும் நிறைந்த மாணவ சமூகத்தை உருவாக்க முன்வரவேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். |
|
|
|
அன்பார்ந்த பழைய மாணவர்களே! |
|
கொக்குவில் இந்துக் கல்லூரி அன்னை மீது நீங்கள் கொண்டுள்ள பற்றும், பாசமும் கண்டு நான் மிகவும் இறுமாப்படைகின்றேன். உங்களுக்கு கல்வி புகட்டி ஆளாக்கிய கொக்குவில் இந்து அன்னையின் உயர்வே உங்கள் நினைப்பாக இருப்பது எனக்கு பெருமையையும்,மட்டற்ற மகிழ்வையும் தருகின்றது. வெளிநாட்டில் இருக்கின்ற போதிலும் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் என்னுடன் தொலைபேசி மூலமாகவும் இணையத்தளத்தின் ஊடாகவும் தொடர்பு கொண்டு கல்லூரியின் அபிவிருத்தி பற்றியும் அதற்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்ற செய்தியையும் நீங்கள் கூறும் போதெல்லாம் இந்தக் கல்லூரயின் வளர்ச்சிக்காகவும்இ எழுச்சிக்காகவும் நீங்கள் ஆற்றும் வகிபங்கு எத்துணை உயர்வானதென்பதை எண்ணிப் பெருமையடைகின்றேன். |
|
உங்களின் உதவியும், ஒத்துழைப்பும், மாணவர்களுக்காக நீங்கள் வழங்கும் புலமைப்பரிசில் திட்டங்களும் எமது மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு பெரும் துணையாக அமைகின்றது. இப்பணியை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற அன்பான கோரிக்கையை முன்வைக்கும் அதே வேளை கொழும்பு, இலண்டன், கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நோர்வே ஆகிய இடங்களில் இயங்கிக்கொணடிருக்கும் எமது கல்லூரியின் பழைய மாணவ சங்கக் கிளைகள் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி பல்வேறு செயற்திட்டங்களை அமுல்ப்படுத்த உள்ள செய்தியை இவ்விடத்தில் தெரிவித்து உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பேருவகை அடைகின்றேன். |
|
|
|
அன்பார்ந்த மாணவர்களே! |
|
நாங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடையக் கூடிய பாக்கியம் உங்களுக்கு உண்டு. அந்த பெருமையையும், புகழையும் பாதுகாக்கும் மிகப்பெரும் பொறுப்பும் உங்களுக்கு இருப்பதை நீங்கள் மறந்து விடலாகாது. உங்களின் எதிர்கால நன்மைக்காக அயராது பாடுபடுகின்ற ஆசிரியர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய நன்றிக் கடன் கல்வியிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் நீங்கள் சாதனை படைப்பதாகும். |
|
2010 ஆம் ஆண்டில் எமது கல்லூரி நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற வரலாற்றுப் பெருமையோடு உங்கள் கல்விச் சாதனைகளும் சேர்ந்து எமது கல்லூரிக்குப் பெருமை சேர்க்கட்டும். உங்களின் கல்விக்கான தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். |
|
2009 ஆம் ஆண்டில் குறைந்தது 75 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் இலக்கை நாம் தீர்மானித்துள்ளோம். இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான செயற்றிட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக க. பொ. த உயர்தர கலைப்பிரிவில் அரசறிவியல்இ நாடகமும் அரங்கியலும் ஆகிய இரு பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் கலைப்பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் இலக்கை அடைவதற்கு வாய்ப்பாக அமையும். அதே வேளை எமது இலக்கை அடைவதற்கு மாணவர்களாகிய நீங்கள் கற்றல் செயற்பாட்டில் கடினமாக உழைக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். கல்வியில் அதிசிறப்புப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதுடன் ஒழுக்கத்தையும்இ பண்பாட்டு ஒழுங்கையும் கடைப்பிடிக்கும் உயர் சாண்றாண்மையின் அடையாளங்களாக நீங்கள் விளங்க வேண்டும். இவையே எமக்கும் உங்கள் கல்லூரிக்கும், மனித சமூகத்திற்கும் நீங்கள் செய்யும் பேருதவியாகும். |
|
|
|
மதிப்பார்ந்த கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களே! |
|
பாடசாலைகளின் முழுமையான செயற்பாட்டில் கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் காத்திரமானதாகும். எமது யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ஆளணியினரின் முமுமையான ஒத்துழைப்பையும், விரைவான நடவடிக்கைகளும், ஆலோசனைகளும் எமது கல்விச் செயற்பாட்டிற்குப் பெருதவியாக அமைகின்றன. |
|
கல்விச் செயற்பாட்டு வழிகாட்டலில் எமது கல்லூரிக்குத் தேவையான வளங்களைத் தந்துதவுதில் எமது கல்வித் திணைக்களம் கருசனையுடனும் விருப்போடும் செயலாற்றி வருவதனால் எமது கல்வி முகாமைத்துவப் பணிகளை இலகுவாகவும், விரைவாகவும், செம்மையாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடிகின்றது. |
|
இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது விசேடமான நன்றியைத் தெரிவிப்பதோடு உங்களின் ஒத்துழைப்பு என்றும் எமக்குக் கிடைக்க வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். |
|
|
|
அன்பான ஆசிரியர்களே! |
|
கொக்குவில் இந்துக் கல்லூரியின் பெருமைக்கும் அதன் புகழுக்கும் உங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையே மூலகாரணம் எனலாம். |
|
எமது கல்லூரியின் ஆசிரியர்களுக்கு வெளிச்சமூகத்தில் இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் தனித்துவமானவை. இந்தத் தனித்துவம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். |
|
அதே நேரம் இன்றை சமூக, பொருளாதார சூழமைவில்; ஆசிரியர்களாகிய உங்களிடம் பாரிய பொறுப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. |
|
இக்கல்லூரியில் 1800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்றனர். இவர்கள் அனைவரும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டசிறார்கள்.. இவர்களின் எதிர்கால வாழ்வு உங்களின் கைகளில் உள்ளது. |
|
கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் பேறு கிடைத்ததால் நாம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றோம் என்ற தகுதி நிலைக்கு மாணவர்களை ஆளாக்குவோமாயின் அவர்கள் உங்களை கண்கண்ட தெய்வங்களாக போற்றுவார்கள். அத்தகையதோர் பெருமை கிடைக்கும் போதே ஆசிரியத் தொழிலின் மகிமையும் பெருமையும் உணரப்படும். அந்த உயர்நிலையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது பேரவா. எமது மாணவர்களின் - எதிர்கால சந்ததியின் உயர்வுக்காக அவர்களிடம் பொதிந்து கிடக்கும் பல்துறைசார் திறன்களை வெளிப்படுத்தி அவர்களை சாதனையாளர்களாக, சாண்றாண்மை மிக்க பிரஜைகளாக உருவாக்க உங்களின் பரிபூரணமான ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும்; என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. |
|
|
|
பக்கம் 1 |
|
|
|
|
பக்கம் 2 |
|
|
|
|
பக்கம் 3 |
|
|
|
|